இலங்கை முஸ்லிம் சமூகத்தில் எழுத்துப் பணியை ஊக்குவிப்பதற்கு ஒருவருமற்ற நிலை காணப்படுவதாக ஜாமியா நளீமியா கலாபீடத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் கலாநிதி அகார் முஹம்மத் தெரிவித்துள்ளார்.
மௌலவி ஆதம்பாவா எழுதிய நான்கு கலீபாக்கள் எனும் நூல் வெளியீட்டு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தள்ளதாவது,
முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டும் நிலை இன்று இல்லை. எழுத்துப் பணியை ஊக்குவிப்பதற்கும் ஒருவருமில்லை. நாம் பேனாவை விட்டும், வாசிப்பை விட்டும் மிகவும் தூரமாகிவிட்டோம். இதனால் நூல்களின் தேவை அரிதாகிவிருகிறது.
நாம் கல்வித்துறையில் முன்னணியில் இருந்தவர்கள். முஸ்லிம் ஸ்பெயின் கலாசாரத்தை நோக்கும்போது அங்கு ஒவ்வொரு வீட்டிலும் நூல்களுக்கென்று தனியான அறை அமைந்திருக்கும். ஆனால் இன்று எமது சமூகம் ஒரு நூலை வாசிப்பதற்கும், சுமப்பதற்கும் விருப்பமற்ற சமூகமாக குளிரூட்டிய அறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றமை நாம் அறிவுத்துறையை எந்தளவு நேசிக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் எமது சமூகத்தில் ஊக்குவிக்கப்படுவதில்லை. அரசாங்கமும் தேவையான நிதியுதவிகளை வழங்குவதாக இல்லை. இதனால் எத்தனையோ வரலாறுகள் நூலுருப்பெறாமல் தேங்கிக்கிடக்கின்றன. எமது சமூகம் தனது வரலாற்றை அறிந்துகொள்ளாத சமூகமாக இருந்துவருகிறது. இந்தப்பயணம் எங்குபோய் முடியுமென்பதை நினைத்துக்கூடப்பார்க்க முடியவில்லை.
இன்றைய இளம் தலைமுறை தாம் விரும்பும் தலைவர்களாக விளையாட்டு வீரர்களையும் சினிமா நடிகர்களையும் நினைத்துக் கொள்கின்றனர். இந்நிலை எப்போது மாற்றம்பெறும்..? சமூகத்தின் பயணம் திசையறியாத பயணமாக இருக்கிறது. எனவே இளம் தலைமுறையினருக்கு எமது வரலாற்றை சரியாக போதிக்கவேண்டும்.
எனினும் இளம்தலைமுறையினரோ இவற்றையெல்லாம் விட்டுவிட்டு குறுகிய காலத்தில் பெருந்தொகைப் பணத்தை எவ்வாறு உழைக்க முடியும் என்பன தொடர்பான அறிவையும் போதனைகளையும் பெற்றுக்கொள்ள விரும்புகிறது எனவும் குறிப்பிட்டார்.


0 comments:
Post a Comment